மிட்டாய் கவிதைகள்!

உயிர்ப்பிச்சையின் உண்மை அர்த்தம்

August 11, 2012

unemploy 01

கடமை சத்தியம் தர்மம் பண்பு
என ‘கசதப’க்கள் ஓலமிட
முழுத் தமிழன் என்ற முனைப்போடு
வேலை தேடச் சென்றிருந்தேன்.

தலை எழுத்துக்களின் தடுமாற்றமோ?
இல்லை முன் ஜென்மப் பாவமோ?
எதிர்மறை வெற்றிகள் மட்டும்
எளிமையாய் எனக்குக் கிடைத்தன.

தூண்டு கோல்கள் அனைத்தும்
தொலைவில் இருக்க என்
பாதச் சுவடுகளை எங்கும்
பதித்துக் கொண்டிருந்தேன்.

ஒற்றை ரூபாயின் உருவம் மறந்திட
பசி என்ற இன்னொரு ‘ப’வும் சேர்ந்திட
வியர்வைத் துளிகள் எல்லாம் என்
கண்ணீர்த் துளிகளாய் உருவெடுத்தன.

சொர்க்க வாசலில் வேலை தேட
தற்கொலைத் தொழிலைச் செய்யத் துணிந்தேன்!
தூக்குக் கயிறும் அருகிலில்லை
விஷ மருந்துகளுக்கும் காசில்லை

துவண்டு போய் விட ஒரு சாலை
யோரம் படுத்து விட்டேன்
காலையில் கண் விழித்த போது
நானும் பத்து ரூபாய்க்குச் சொந்தக்காரன்!

நல்ல மக்கள் நாடெங்கும் உள்ள போது
நான் ஏன் சாக வேண்டும்
மீண்டும் செல்கிறேன் வேலை தேட!


எழுத்தாளர்: எம்.ஆர்.கார்த்திக்